‘டெல்டா’ வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள தெமட்டகொட 69 வது தோட்டத்தில் இருந்து வேறு பகுதிகளுக்கு பி.1.617.2 வைரஸ் வேகமாக பரவக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும்,குறித்த பகுதிகளில் துரிதமாக பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுத்து வைரஸ் பரவல் உள்ளதா என கண்டறிய வேண்டும் எனவும் பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
தெமட்டகொட 69 வது தோட்டத்தில் வசிக்கும் மக்கள் வெவ்வேறு பகுதிகளில் நிறுவன சுத்தப்படுத்தல் தொழில்களில் ஈடுபடுகின்றனர். அதேபோல் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான பலர் இந்த பகுதியில் வசிக்கின்றனர்.போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் பலரும் இங்கு வசிப்பதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கொழும்பில் முச்சக்கரவண்டி ஓட்டும் பலரும் இந்த பகுதியில் வாழ்கின்றனர். ஆகவே தான் இவ்வாறான ஒரு பகுதியில் பி.1.617.2 வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளதால் வைரஸ் வேறு பகுதிகளுக்கு வேகமாக பரவும் சாத்தியம் அதிகமானது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு முடக்கத்தில் இருக்கின்ற காலகட்டத்திலும் கூட இந்த பகுதி மக்களின் சுகாதார செயற்பாடுகள் மிகவும் கீழ் மட்டத்தில் இருப்பதாகவே பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் அதிகாரிகள் எமக்கு தெரிவித்துள்ளனர்.இந்த பகுதியில் இருந்து அருகில் உள்ள வேறு பகுதிகளுக்கு வைரஸ் தொற்று பரவியிருக்கும் என்ற சந்தேகம் எம்மத்தியில் உள்ளது.ஆகவே துரிதமாக இது குறித்து ஆராய்ந்து, வைரஸ் பரவல் இருப்பின் குறித்த பகுதிகளை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.