
எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் கடல்சார் சூழல் மற்றும் கடல் வாழ் உயிரினங்களை மீட்டெடுப்பதற்கு இங்கிலாந்து அரசு கடல் மாசுபாடு நிபுணத்துவத்தை அளித்து வருவதாக பிரிட்டனின் உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
“பிரிட்டனின், சுற்றுச்சூழல், மீன்வள மற்றும் மீன் வளர்ப்பு அறிவியல் மையம் (செஃபாஸ்), பிளாஸ்டிக் மாசு கண்காணிப்பு, சுற்றுச்சூழல் மற்றும் சமூக பொருளாதார தாக்க மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கான நிபுணத்துவம் மற்றும் பகுப்பாய்வு திறனை வழங்கும் என இலங்கைக்கான பிரிட்டனின் உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் கூறியுள்ளார்.
இலங்கை எதிர்கொண்டுள்ள அவசரகால நிலையில் இலங்கைக்கு உதவுவதற்காக இங்கிலாந்தின் நிபுணர்கள் இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து செயற்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் வேதியியல் மாசுபடுதலின் ஆய்வக பகுப்பாய்வுக்கு செஃபாஸ் உதவுவதுடன் தங்களது இங்கிலாந்து ஆய்வகத்தில் உள்ள நிபுணர்களும் தமது ஒத்துழைப்பை வழங்க உள்ளனர்.
கப்பல் விபத்து காரணமாக உள்ளூர் சமூகங்கள் மற்றும் வாழ்வாதாரங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மதிப்பிடுதல் உள்ளிட்ட சமூக பொருளாதார பகுப்பாய்விற்கும் அவர்கள் பங்களிப்பார்கள்.
இதைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரங்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எதிர்கால சம்பவங்களுக்கு தீர்வு காணும் வகையில் இலங்கையில் உள்ள அவசரகால செயற்பாட்டுக் குழுக்களுக்கு வழிகாட்டுதலையும் பயிற்சியையும் செஃபாஸ் தொடர்ந்து வழங்கும்.
இங்கிலாந்தின் நிபுணர் குழு குறுகிய காலத்திற்கு தூய்மைப்படுத்தும் நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதோடு, நீண்ட காலத்திற்கு தடுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுவார்கள் என்று பிரிட்டனின் உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.