May 22, 2025 22:51:00

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழர் அபிலாஷைகள் நிறைவேற இந்தியா ஆதரவளிக்கும்’: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இந்திய தூதுவர்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும், ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளும் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு இந்தியாவின் நிலையான ஆதரவு இருக்கும் என்று இந்திய தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று நடைபெற்ற சந்திப்பில் இந்திய தூதுவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரின் இல்லத்தில் இன்று இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் தலைவர் த. சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கின் அபிவிருத்தி, புதிய அரசியலமைப்பு, அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட தமிழ் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.