November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கோவாக்ஸ்’ திட்டத்தின் மூலம் இலங்கைக்கு 2 இலட்சத்து 64 ஆயிரம் டோஸ் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகள்!

உலக சுகாதார ஸ்தாபனத்தின் ‘கோவாக்ஸ்’ திட்டத்தின் மூலம் 2 இலட்சத்து 64 ஆயிரம் டோஸ் அஸ்ட்ரா செனிகா    தடுப்பூசிகள் இலங்கைக்கு  கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

உலக சுகாதார ஸ்தாபனம் ஏற்கனவே அதிகாரபூர்வ கடிதத்தில் சுகாதார அமைச்சுக்கு இந்த தடுப்பூசிகள் வழங்குவதை உறுதிப்படுத்தியுள்ளது என்றும் ஜூலை மாத தொடக்கத்தில் தடுப்பூசிகளை பெற முடியுமென தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆறு இலட்சம் பேர் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுள்ள நிலையில், அவர்களுக்கு இரண்டாவது டோஸை செலுத்த வேண்டியுள்ளது. இதன்படி இலங்கைக்கு கிடைக்கவுள்ள 2,64,000 டோஸ் தடுப்பூசிகளுக்கு மேலதிகமாக 336,000 டோஸ் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.

அத்துடன், ஒரு மில்லியன் டோஸ் பைசர் தடுப்பூசிகளை இலங்கையின் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் கோரியுள்ளது. அத்துடன் அதனை அஸ்ட்ரா செனிகாவுக்கு பதிலாக பயன்படுத்த முடியுமா என்பது குறித்து ஆராயப்படுகிறது.

இந்த கலவையை பரிந்துரைக்கும் சில முடிவுகள் இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் சமீபத்தில் கூறிய பின்னர், அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகளை இரண்டாவது டோஸாக பெற வேண்டியவர்களுக்கு இது பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.