July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“இலங்கை கடற்பரப்பில் இதுவரையில் 400 கடல் ஆமைகள் வரை உயிரிழந்திருக்கலாம்”

இலங்கை கடற்பரப்பில் இதுவரையில் 400 கடல் ஆமைகள் வரை உயிரிழந்திருக்கலாம் என சுற்றுச்சூழல் ஆர்வலர் ரன்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பு நியூஸ் ஃபர்ஸ்ட் செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் கடற்பரப்பில் இதுவரை 40 கடல் ஆமைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

ஒரு கடல் ஆமையின் உடல் கரை ஒதுங்குமானால் கடலில் 10 ஆமைகள் உயிரிழந்திருக்கலாம். அதன் படி, இலங்கை கடற்பரப்பில் இதுவரையில் 400 கடல் ஆமைகள் உயிரிழந்திருக்கலாம் என்றார்.

இவ்வாறு அதிக எண்ணிக்கையில் ஆமைகள் உயிரிழப்பது அசாதாரணமானது என குறிப்பிட்ட அவர், கரை ஒதுங்கும் கடல் உயிரினங்களின் உடல்களை ஏனைய பிராணிகள் இதுவரை உணவாக கொள்ளவில்லை. இதனால் இந்த உயிரினங்களில் நஞ்சுப்பொருள் அடங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக குறிப்பிட்டார்.

இறந்த ஆமைகள் மற்றும் டொல்பின்களின் உடல்களின் இரசாயன உள்ளடக்கங்கள் குறித்து முறையான அறிவியல் மற்றும் வேதியியல் விசாரணையை நடத்தி அதை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வனஜீவராசிகள் பாதுகாப்புத் துறையினர் முன்வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கையின் மேற்கு கடற்பரப்பில் ஆமைகளின் உடல்கள் கரையொதுங்குவது வழக்கத்திற்கு மாறானது.‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பல் விபத்தின் பின்னரே இவை நிகழ்கின்றன. எனவே இது கப்பல் விபத்தினால் ஏற்பட்ட தாக்கம் என்பது தெளிவாக தெரிகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

25 கி.மீ ஆழமான கடலில் வாழும் டொல்பின் கற்பிட்டி  கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ளதை அடுத்து கப்பலினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு எத்தகையது என்பதை ஊகிக்க முடிவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டு மக்களுக்கு மீன்களை சாப்பிடுமாறு அறிவுறுத்துவதற்கு முன்பு, மீன்களின் உடலில் ஏதேனும் நச்சு இரசாயனங்கள் உள்ளதா என்பதைக் கண்டறிய ஒரு இரசாயன பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அது குறித்து ஒரு அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர் ரன்வெல்ல தெரிவித்தார்.