
எரிபொருள் விலை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டத் தரப்பினருக்கு மானியம் வழங்கும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு அமைச்சர்கள் பலர் அமைச்சரவையில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றுள்ளது.
இதன்போது இலங்கைப் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எதிர்நோக்கியுள்ள நிதி நெருக்கடி நிலைமையில் எரிபொருள் விலைகளை அதிகரிப்பதை தவிர மாற்று வழி கிடையாது என்று அந்தக் கூட்டத்தில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் எரிபொருள் விலையேற்றத்தால் மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்நோக்கக் கூடிய பிரச்சனைகள் குறித்து அமைச்சர்கள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்வேளையில், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு மானியங்களை வழங்குவது குறித்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக விடயத்திற்கு பொறுப்பானவர்கள் கூறியுள்ளதாக அரசாங்க தகவல்கள் கூறுகின்றன.