
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் செயலாளர் சாகர காரியவசத்தின் செயற்பாடுகள் குறித்து ஆளும் தரப்பு பங்காளிக் கட்சிகள் இடையே கடும் கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இது விடயம் குறித்து ஆளும் தரப்பு பங்காளிக் கட்சிகள் கூடி ஆராய்ந்துள்ளனர்.
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பிலான அறிவிப்பையடுத்து ”அமைச்சர் உதய கம்மன்பில அமைச்சுப் பதவியை துறக்க வேண்டும்” என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் செயலாளர் சாகர காரியவசம் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சி தலைவர்களின் கூட்டமொன்று இன்று (13)அமைச்சர் விமல் வீரவன்சவின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உருவாக்கத்தில் அதிக பங்களிப்பை செலுத்தியவர்கள் என்ற ரீதியில் இந்த அரசாங்கத்தில் எமக்கே அதிக உரிமைகள் உள்ளன.
இந்த அரசாங்கத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்பட்டுக்கொண்டுள்ளோம்.ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு அரசாங்கத்தை பலவீனப்படுத்துவது ஏன் என்பது குறித்து ஜனாதிபதியும், பிரதமரும் ஆராய வேண்டும் என கட்சி தலைவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.
அத்தோடு சாகர காரியவசம் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பிரதமர் பின்வாங்கக்கூடாது எனவும் சாகர காரியவசம் குறித்த விசாரணை ஒன்றை நடத்தி இதற்கான தீர்வு ஒன்றை பெற்றுக்கொடுக்க பிரதமர் வலியுறுத்த வேண்டும் எனவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.