சிலோன் தேயிலை அதன் தோற்றத்தின் தரம் மற்றும் தனித்துவத்தை இழக்குமானால் உலக சந்தையில் அதன் இடத்தை இழக்க நேரிடும் என சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெஹல் குணரத்ன தெரிவித்தார்.
இலங்கையில் நிலவும் புதிய உரக் கொள்கையின் காரணமாக 70 சதவீத உற்பத்தியில் பங்களிக்கும் சிறு தேயிலைத் தோட்ட விவசாயிகள் புதிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போதுமான அளவு உரம் இல்லாமையினால் அடுத்த மூன்று மாதங்களுக்குள் சிறு தேயிலைத் தோட்டங்களில் விளைச்சலும் தரமும் குறையும். அத்தோடு சர்வதேச சந்தையில் இலங்கை தேயிலையின் தனித்துவம் வரலாற்று புத்தகங்களில் ஒரு பெயராக மட்டுமே இருக்கும் என்றார்.
மே மாதத்திற்கு தேவையான தேயிலை உற்பத்தியாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கு தேவையான உரம் இல்லாது உள்ளது.
சேதன உரம் நல்லது என்றாலும் நாட்டின் தேவையை பூர்த்தி செய்வதற்கு தேவையான உர உற்பத்திக்கு குறைந்தது ஐந்து வருடங்கள் ஆகலாம். மேலும் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றார்.
தேயிலை சிறுதொழில் மேம்பாட்டு ஆணைக்குழுவிடம் இது குறித்து வினவிய போதும் அவர்களிடமிருந்து சரியான பதில் கிடைக்கவில்லை. இதுபோன்ற திடீர் மாற்றத்தின் விளைவாக விவசாயிகள் எதிர்கொள்ளும் பாதகமான சூழ்நிலை குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்.
தேயிலை பயிர் செய்கையின் போது உலகில் எந்த ஒரு நாடும் இதுவரை சேதன உர பயன்பாட்டிற்கு மாறியதாக தாம் அறியவில்லை எனவும் கெஹல் குணரத்ன கூறினார்.
தேயிலை பயிர் செய்கையின் போது உரங்கள் இல்லாது போனால் அவை ஊட்டச்சத்து மதிப்பை இழப்பதோடு, இலை மஞ்சள் நிறமாக மாறும். இரசாயன உர பயன்பாட்டின் மூலமே இழந்த ஊட்டச்சத்து மதிப்பை மீள் நிரப்ப முடியும்.
நாட்டில் சிறு தேயிலை தோட்டங்கள் ஊடாக தமது வாழ்வாதாரத்தை நம்பியிருக்கும் 600,000க்கும் அதிகமானவர்கள் இதனால் பாதிக்கப்படுவர் எனவும் கெஹல் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு களை கொல்லியான கிளைபோசேட் ,தெளிக்கப்படாதபோது, தாவரங்கள் சுமார் ஒன்றரை வருட காலத்திற்குள் இயற்கையான மரணம் அடைந்துவிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.