எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் இரத்து செய்யுமாறு மக்கள் விடுதலை முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது.
தொற்று நோய் மற்றும் ஜீவனோபாய இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எரிபொருள் விலை அதிகரிப்பு மேலும் சுமையாக அமைந்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹன்துநெட்டி தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையை நிலையாக வைத்திருப்பதற்கான நிதி, பொதுமக்கள் நலனுக்காக பயன்படுத்தப்படாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தாலும், அது மக்களைப் பாதிக்காமல் இருப்பதற்காக அரசாங்கம் கடந்த ஆண்டு ஒரு நிதியத்தை ஆரம்பித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியத்தை இதுபோன்ற இக்கட்டான நிலையில், மக்கள் பயனடையக் கூடிய விதத்தில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா மற்றும் பயணக் கட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வடைந்துள்ளதாகவும், இந்த எரிபொருள் விலை அதிகரிப்பு அதனை மேலும் தீவிரப்படுத்தும் என்றும் சுனில் ஹன்துநெட்டி குறிப்பிட்டுள்ளார்.