யாழ்ப்பாணம், கண்டி நெடுஞ்சாலையின் மிருசுவில் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் கோயிலை இடித்தழித்த குற்றச்சாட்டில் டிப்பர் வாகனம் ஒன்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதுடன் சாரதியையும் கைது செய்துள்ளனர்.
கொடிகாமத்திற்கும் மிருசுவிலுக்கு இடையில் வீதியோரமாக அமைந்துள்ள சிறிய பிள்ளையார் ஆலயம் கடந்த 7 ஆம் திகதி இடித்து உடைக்கப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், கோயிலை டிப்பர் வாகனம் ஒன்றினால் மோதியே உடைத்தமை கண்டறியப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், குறித்த டிப்பர் வாகனம் தொடர்பிலான தகவலைப் பெற்று டிப்பர் வாகனத்தை பொலிஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில், குறித்த டிப்பர் வாகனம் யாழ்ப்பாணம்- கண்டி நெடுஞ்சாலையில் பயணித்த போது, கொடிகாம பொலிஸார் வழிமறித்து, பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சாரதி கொடிகாம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஆரம்ப கட்ட விசாரணையில் டிப்பர் சாரதி முல்லைத்தீவை சேர்ந்தவர் எனவும், சாரதி முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கி வருவதால் பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இடித்தழிக்கப்பட்ட பிள்ளையார் கோயிலை இன்றைய தினம் மீள நிர்மாணிக்கும் பணிகளை சிலர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.