
இலங்கையில் நாளொன்றில் கிட்டத்தட்ட 38 பேர் கொரோனா வைரஸினால் உயிரிழப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார்.
தொற்று நோயியல் பிரிவினால் கடந்த மாதம் வெளியிடப்பட்ட நாளாந்த கொரோனா இறப்புகளின் அறிக்கையை ஆய்வு செய்ததாகவும் அவர் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
கொரோனாவினால் நாளாந்தம் உயிரிழப்போரின் எண்ணிக்கை 38 ஆக உள்ளதாகவும், அது ஒருவேளை உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் அல்லது குறைவடையலாம் என்றும் அவர் கூறினார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஒரே நாளில் கிட்டத்தட்ட 38 கொரோனா மரணங்கள் நிகழ்ந்ததாக வரைபடமொன்றின் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்தது. ஆயினும், தொற்று நோயியல் பிரிவிலிருந்து தாமதமாக புள்ளி விபரங்களை நாங்கள் பெற்றதால், கணிப்புகளை செய்வது மற்றும் இறுதி முடிவுகளுக்கு வருவது மிகவும் கடினம்.
கடந்த ஆறு அல்லது ஏழு நாட்களில் முந்தைய கொரோனா மரணங்கள் 30 இற்கும் மேற்பட்டதாக அறிக்கைகள் வழங்கப்பட்டன. ஆனால், அறிவிக்கப்பட்ட திகதியில் ஒன்று அல்லது இரண்டு மரணங்கள் மட்டுமே நிகழ்ந்தன.
இது தொற்று நோயியல் பிரிவில் இருந்து புள்ளிவிபரங்களை வெளியிடுவதில் உள்ள தவறான தன்மையைக் காட்டுவது மாத்திரமல்லாது, புள்ளி விபரங்களும் வழக்கற்றுப் போய்விட்டன என அவர் தெரிவித்தார்.
இதனிடையே, கடந்த சில நாட்களில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளும்போது, மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்தில் தான் அதிக எண்ணிக்கையிலான மரணங்கள் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.
அந்த மரணங்களில் 28 சதவீதம் வீடுகளில் பதிவாகியுள்ளதாகவும், இது அபாயகரமான நிலைமையாக பார்க்கப்படுகின்றது. இதில் கொழும்பு மாவட்டத்தில் வீடுகளில் ஏற்பட்ட மரணங்களின் சதவீதம் 18 சதவீதமாகும்.
கடந்த மே மாதத்தில் 793 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. அந்த மரணங்களில் 123 மரணங்கள் களுத்துறையில் இடம்பெற்றுள்ளது. கொழும்பில் 99 மரணங்கள், காலி 96 மரணங்கள், கம்பஹாவில் 81 மரணங்கள் என அதிகபட்ச மரணங்கள் பதிவாகியுள்ளன.
எனவே, நிலைமையை துல்லியமாக பகுப்பாய்வு செய்ய வேண்டும். இல்லையென்றால், நிலைமை ஒரு பெரிய பேரழிவாக மாறும் என வைத்தியர் பிரசாத் கொலம்பகே குறிப்பிட்டார்.