July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் கடற் பிரதேசத்தில் 17 கடலாமைகளும் 3 டொல்பின்களும் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன!

இலங்கையின் கரையோரப் பகுதிகளில் உயிரிழந்த நிலையில் 17 கடலாமைகளும் மூன்று டொல்பின்களும் பல மீன் இனங்களும் பவளப்பாறைகளின் சிதைவுகளும் கரை ஒதுங்கியுள்ளன.

எழில் மிகுந்த இலங்கை கடற்பரப்பு ‘எக்ஸ்- பிரஸ் பேர்ல்’ தீ விபத்துக்கு பின்னர் பல அழிவுகளை சந்தித்து வருகின்றது.

இலங்கையின் கடற்கரையில் பொழுதை கழிக்கவென சர்வதேச நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

எனினும் இன்று, இலங்கை கடற்பரப்பில் கரையொதுங்கும் உயிரினங்களின் உடல்கள் நாட்டின் பொருளாதாரத்திலும் உயிர் பல்வகைமையிலும் ஏற்படபோகும் தாக்கத்திற்கான சமிக்ஞை என்பதே சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

உயிரிழந்து கரை ஒதுங்கும் உயிரினங்களை விடவும் அதிக எண்ணிக்கையானவை கடலில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

கொஸ்கொட கடற்கரையில் மூன்று கடலாமைகள் கரையொதுங்கின. அத்தோடு பயாகல வடக்கு, தெஹிவளை, வாதுவ – தல்பிட்டி, அங்குலானை ஆகிய பிரதேசங்களின் கடற்கரையிலும் கடல் ஆமைகள் கரையொதுங்கியுள்ளன.

இவ்வாறு கரையொதிங்கியுள்ள கடலாமைகள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதுவரை கடலாமைகள் தொடர்பில் எட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வாதுவ – தல்பிட்டிய, இந்துருவ கடற்கரையில் உயிரிழந்த இரு டொல்பினின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன.

கரையொதுங்கிய டொல்பின் உடல் தொடர்பிலான ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, சுதுவெல்ல கடற்கரை  பகுதியில் பவளப்பாறையின் சிதைவுகள் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

‘எக்ஸ்- பிரஸ் பேர்ல்’ தீ விபத்துக்கு பின்னர் கடல்வாழ் உயிரினங்கள் ஏன் இவ்வாறு இறக்கின்றன என்பது தொடர்பில் கடல்வாழ் உயிரின நிபுணர் துஷான் கபுருசிங்க தமது கருத்தை ஊடகம் ஒன்றுக்கு வெளியிட்டுள்ளார்.

நச்சு இரசாயனம் கடலில் கலந்தவுடன் அதன் அடர்த்தி குறைவடையும் எனவும், அதன் தாக்கம் குறையும் எனவும் சிலர் வாதிடுவதை கடல்வாழ் உயிரின நிபுணர் என்ற வகையில் தாம் நிராகரிப்பதாக கூறியுள்ளார்.

“நச்சு இரசாயனம் மூலம் கடலாமைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். நச்சுப் பதார்த்தங்கள் உடலுக்குள் அடங்கியுள்ள உயிரினங்களை இவை உணவாகக் கொண்டால், அவற்றையும் அந்த விஷம் சென்றடையும்.

அவ்வாறில்லாமல், கப்பலிலிருந்து வீழ்ந்தவற்றை நேரடியாக உணவாக உட்கொள்கின்றன என நான் இங்கு கூறவில்லை. இறுதியில் இது மனிதர்களிடையேயும் பரவலாம்” என கூறியுள்ளார்.

இதனிடையே,  ‘எக்ஸ்- பிரஸ் பேர்ல்’ தீ விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட கடல் பரப்புக்குள் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

உயிரினங்களின் இறப்பிற்கு, ‘எக்ஸ்- பிரஸ் பேர்ல்’ கப்பலில் இருந்து வெளியான நச்சு இரசாயன பதார்த்தம் தான் காரணமா? என ஆராயப்படுவதாக சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்காக கடலாமைகளின் உடற்பாகங்கள் பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகார சபை கூறியுள்ளது.