January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கப்பல் தீ பிடிக்க மோசமான காலநிலையே காரணம்; சதித்திட்டம் ஏதுமில்லை என்கிறார் நாலக கொடஹேவா

இலங்கைக் கடலில் தீப்பிடித்த எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் இரகசியமாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ இலங்கை கடல் பரப்பில் நுழையவில்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

அத்தோடு, மோசமான காலநிலை காரணமாகவே கப்பல் தீப்பிடித்திருக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இன்று (08) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பல் ஒவ்வொரு மாதமும் இலங்கைக்கும் ஏனைய நாடுகளின் துறைமுகங்களுக்கும் செல்லும் கப்பல் எனவும், தீப்பிடித்த இந்தக் கப்பல் சிங்கப்பூரில் ஆரம்பித்து ஆறு நாடுகளுக்கு பயணிக்கும் கப்பலாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மே 17 ஆம் திகதி வரவேண்டிய கப்பல் மோசமான காலநிலை காரணமாக இரு நாட்களுக்கு பின்னர் வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் 1466 கொள்கலன்கள் இருந்தன.அதில் 513 கொள்கலன்கள் இலங்கையில் இறக்க வேண்டியவையாகும். ஆகவே இது ஒரு இரகசிய கப்பல் என எவரும் கூற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், கப்பல் விபத்திற்கு உள்ளானதை அறிந்து கொண்டவுடன் இலங்கை கடல் எல்லையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடலில் எதுவிதமான இரசாயனங்களும் கலக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். கடலில் கலக்கப்பட்ட கழிவுகளை நாம் முழுமையாக அகற்றும் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் எமது கடல் பரப்பை முழுமையாக சுத்தப்படுத்தி விடுவோம். அதேபோல் நஷ்ட ஈடு எடுக்கப்படும். ஆனால் அது உடனடியாக பெற்றுக்கொள்ள முடியாது.

எனினும் இடைக்கால நஷ்டஈடு ஒன்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றோம் எனவும் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.