July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை வருபவர்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயம்: தனிமைப்படுத்தல் நடைமுறையிலும் மாற்றம்!

Sri Lanka Bureau of Foreign Employment official facebook

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகை தருபவர்களுக்கான விதிமுறைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தனவின் கையொப்பத்துடன் குறித்த திருத்தப்பட்ட வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, இந்தியா, வியட்நாம், தென்னாபிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களுக்குள் வந்தவர்கள் தனிமைப்படுத்தல் மையத்தில் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் அவர்கள் பெற்றிருந்தாலும் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஏனைய நாடுகளிலிருந்தும் நாட்டுக்குள் பிரவேசிக்கும் இலங்கையர்கள் அல்லது இரட்டை குடியுரிமை பெற்றவர்களும் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றிருந்தாலும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொரோனா தொற்று ஏற்படவில்லையாயினும், 14 நாட்கள் கட்டாயம் வீட்டுத் தனிமைப்படுத்தலுக்கு செல்ல வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு நாட்டில் இருந்தும் நாடு திரும்புகின்ற அனைத்து இலங்கையர்களும் அல்லது இரட்டை குடியுரிமை பெற்றவர்களும் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட ஆங்கில மொழியில் உள்ள பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையை கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, அனைத்து இலங்கை குடிமக்களும் கட்டாயமாக விமானத்தில் ஏறுவதற்கு 96 மணி நேரத்திற்குள் செய்யப்படும் எதிர்மறை பி.சி.ஆர் பரிசோதனையோ அல்லது இறங்குவதற்கு 48 மணி நேரத்திற்குள் விரைவான அன்டிஜன் பரிசோதனையோ மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் எதிர்மறையான பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையை 96 மணி நேரத்திற்குள் மேற்கொண்டு கொரோனா வைரஸ் இல்லை என உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உயிர்க்குமிழி முறைமையில் நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு  குறித்த புதிய நடைமுறை பொருந்தாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, வெளிநாடுகளில் இருந்து வருகின்ற 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான புதிய நடைமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, இரண்டு முதல் இரண்டரை வயதுக்குட்பட்ட குழந்தைகள் நாட்டை வந்தடைந்தவுடன் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு எதிர்மறை முடிவுகள் கிடைத்தால் வெளியேறலாம்.

ஒருவேளை, குறித்த குழந்தையுடன் வந்த பெரியவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டால் அந்தக் குழந்தைக்கும் பி.சி.ஆர் பரிசோதனை செய்ய வேண்டும்.

இதேவேளை, தனிமைப்படுத்தலை முடித்துக்கொண்ட பிறகு வீடு திரும்புகின்றவர்கள் தனிப்பட்ட முறையில் போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் என்பதுடன், ஒருபோதும் பொதுப் போக்குவரத்துகளில் பயணிக்க முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, வீடு திரும்பியவுடன் தாம் வசிக்கின்ற பகுதியிலுள்ள பொது சுகாதார பரிசோதகர் காரியாலயத்தில் அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.