பாணந்துறை பகுதியில் பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பாணந்துறை வடக்கு, வத்தல்பொல பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான குறித்த சந்தேகநபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு பொலிஸாரின் வாகனத்தில் ஏற்றப்பட்டுள்ளார்.
இதன்போது பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்வதற்காக வாகனத்திலிருந்து வெளியே பாய்ந்தபோது கடும் காயங்களுக்குள்ளான நிலையில் அந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனினும், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சந்தேக நபரை கைது செய்த பாணந்துறை – வடக்கு பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் மற்றும் சார்ஜன்ட் ஒருவரும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதனிடையே, உயர் பொலிஸ் அதிகாரியொருவரின் தலைமையில் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த மரணம் தொடர்பாக நீதிமன்ற விசாரணை மற்றும் பிரேதப் பரிசோதனை என்பன நீதிமன்ற மருத்துவ அதிகாரியால் நடத்தப்படவுள்ளதுடன், அதற்காக உதவி பொலிஸ் அதிகாரியொருவரின் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.