January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீ பற்றியமை குறித்து ஆராய பாராளுமன்ற தெரிவுக் குழுவை நியமிக்குமாறு ரணில் கோரிக்கை

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீ பற்றியமை தொடர்பில் ஆராய பாராளுமன்ற தெரிவுக் குழுவை நியமிக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து ஏற்பட்ட மே 20 முதல் மே 25 வரையான காலப்பகுதியில் தற்போதுள்ள சட்டத்தை அரசாங்கம் ஏன் செயல்படுத்தவில்லை? எனவும் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசித்த போது தீ பரவல் ஏற்பட்டிருந்தால், அது கொழும்பு துறைமுகத்திலிருந்து ஷாங்க்ரி-லா ஹோட்டல் வரையிலான அனைத்து கட்டிடங்களையும் அழித்திருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மே 19 இரவு கொழும்பு துறைமுக கடற்பரப்பிற்குள் பிரவேசித்த கப்பலுக்கு மே 20 ஆம் திகதி எமது குழுவினர் சென்ற போது கப்பலில் தீ விபத்து ஏற்பட்டமை கண்டறியப்பட்டது.

இதையடுத்து மே 25 க்குள், கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA) சர்வதேச கடல்சார் அமைப்புக்கு (IMO) அந்த பகுதி ஆபத்தில் இருப்பதாக தெரிவித்தது. தீ விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்தது.

இது ஆங்கிலத்தில் “அடுக்கு 2” என்று குறிப்பிடப்படுகிறது. இதன் பொருள் என்னவென்றால், இலங்கையினால் தீ பரவலை கட்டுப்படுத்துவது கடினம். அதற்கு வெளி உதவி தேவைப்படலாம் என்பதாகும்.

சர்வதேச கடல்சார் அமைப்பு (ஐ.எம்.ஓ) உதவி தேவை என்று அறிவிக்கப்பட்ட போதிலும், இலங்கை அரசாங்கமோ அல்லது கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையோ சர்வதேச உதவியைக் கோரவில்லை. மே 20 முதல் மே 25 வரை தற்போதுள்ள சட்டத்தை அரசாங்கம் ஏன் செயல்படுத்தவில்லை? இது மிக முக்கியமான கேள்வி என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இத்தகைய சூழ்நிலையில் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தேசிய கவுன்சில் கூட்டப்படலாம். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் 5 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட 20 அமைச்சர்கள் பங்கேற்று இந்த தேசிய கவுன்சில் உருவாக்கப்படலாம்.

இவ்வாறு நியமிக்கப்பட்ட தேசிய கவுன்சில் கடலோர பாதுகாப்பு படை சார்பாக சந்தித்து முடிவுகளை எடுத்திருக்கலாம். ஆனால் யாரும் அத்தகைய முடிவை எடுக்கவில்லை எனவும் அவர் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு தேசிய பேரழிவு ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தால், தீயை அணைக்க வெளிநாட்டு உதவியை பெற்றிருக்கலாம். இந்தியாவின் உதவியும் தாமதமாகவே பெற்று கொள்ளப்பட்டது.

இரசாயனக் கப்பலின் தீ பற்றி ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு மிகப் பெரிய அறிவு இருக்கிறது. சர்வதேச கடல் அமைப்புக்கு ஏன் தகவல் தெரிவிக்கப்படவில்லை மற்றும் தீயை அணைக்க சர்வதேச உதவியை ஏன் கோரவில்லை? ஏன் தீ பரவலை கப்பலை அழிக்கும் நிலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது? போன்ற கேள்விகள் எழுவதாக அவர் கூறியுள்ளார்.

இதனால் நமது எதிர்கால பொருளாதாரத்திற்கு ஏற்பட போகும் சேதம் மற்றும் கடல் சார் சுற்றுச்சூழலுக்கு ஏற்படபோகும் சேதம் குறித்து அரசாங்கமும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையமும் சிந்தித்திருக்க வேண்டும்.

கொழும்பில் உள்ள பவளப்பாறை காரணமாகவே சுனாமி பேரழிவின் போது கொழும்பு நகரம் காப்பாற்றப்பட்டது. இந்த இரசாயனங்கள் கடலில் சேர்வதால் கொழும்பைச் சுற்றியுள்ள பவளப்பாறைகள் அழிக்கப்படும் அபாயம் உள்ளது.

கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து ஆராய உடனடியாக நாடாளுமன்ற தெரிவுக் குழு ஒன்றை நியமிக்க முன்மொழிவதாக ரணில் விக்ரமசிங்க குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த வாரம் பாராளுமன்றம் கூடும் போது உறுப்பினர்களை நியமித்து, ஒரு தெரிவுக் குழுவை நியமிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, கப்பல் தீ விபத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார சேதம் குறித்த பூர்வாங்க அறிக்கையை பாராளுமன்ற தெரிவுக் குழுவினால் ஜூலை முதல் வாரத்தில் முன்வைக்க முடியும்.

கப்பல் எவ்வாறு தீப்பிடித்தது, ஏன் அதை அணைக்க முடியவில்லை என்பதை அறியவும் கப்பல் தொடர்பாக அரசு எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து அறியவும் மக்களுக்கு உரிமை உண்டு.

எனவே, இதனை விரைவாக செயல்படுத்துமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்வதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.