January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் தொடர்ச்சியாக உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கும் கடல் வாழ் உயிரினங்கள்!

இலங்கையின் கடற்பரப்பில், எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றி எரிந்தமையால் இலங்கையின் கடற் சார் சூழலின் பெரும் பகுதி மாசடைந்துள்ளது.

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றியது முதல் கடல்வாழ் உயிரினங்கள் பல உயிரிழந்த நிலையில், கரை ஒதுங்கி வருகின்றமை சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் கவலையை மேலும் அதிகரித்துள்ளது.

இதுவரை இலங்கையின் புத்தளம் முதல் மிரிஸ்ஸ வரையான கடற்கரைப் பகுதியில் பத்து ஆமைகள், ஒரு டொல்பின், கடற்பறவைகள், பல மீன் இனங்கள் இவ்வாறு உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆமைகள் உஸ்வெடகெய்யாவ, பாணந்துறை, உனவடுன, வெள்ளவத்தை, மொரட்டுவை மற்றும் இந்தூருவ கடற்கரைகளில் கரை ஒதுங்கியுள்ளன.

இதில் ஏற்கனவே உனவடுன கடற்கரையில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட இரண்டு ஆமைகளும் இதில் அடங்குகின்றன.

பாணந்துறை மற்றும் வெள்ளவத்தை ஆகிய கடற்கரைகளில் இறந்து கிடந்த பெரும்பாலான ஆமைகளின் ஓடுகள் உடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் இது கப்பலின் தீ காரணமாக ஏற்பட்டிருக்காது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

விலங்குகள் மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், அனைத்து கடல் ஆமைகள் அவற்றின் குஞ்சுகள் மற்றும் முட்டை என்பனவும் முழுமையாக பாதுகாக்கப்படுகின்றன.

இதற்கமைய உனவட்டுன கடற்கரை பகுதியில் உயிரிழந்த நிலையில், கரையொதுங்கிய கடல் ஆமையின் மரணத்திற்கான காரணம் தொடர்பில் ஆராயுமாறு அத்திட்டிய வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கு காலி மேலதிக நீதவான் சஞ்சீவ பத்திரண ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

இதேபோன்று தற்போது கரை ஒதுங்கியுள்ள கடல் ஆமைகளின் உடல்கள் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இறப்பு குறித்து ஆராய ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டன.

ஆய்வறிக்கைகள் வந்ததன் பின்னர் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.

மேலும், இன்று (06) காலை கொஸ்கொட கடற்கரையில் உயிரிழந்த நிலையில் டொல்பின் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் உயிரிழப்பிற்கான காரணம் அறியப்படவில்லை.

அத்தோடு பயாகல மற்றும் பாணந்துறை கடலோர பகுதிகளிலிருந்து மேலும் ஐந்து கடல் ஆமைகளின் உடல்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கி வரும் கடல் உயிரினங்கள் தொடர்பில் கடல் சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை, தேசிய நீர்வாழ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இலங்கை கடற்படை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அதிகார சபை என்பன முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.