இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் தடுப்பூசி திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
எனினும் எந்தவொரு மாவட்டத்திலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடைநிறுத்தப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேல் மாகாணம், குருனாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி மையங்கள் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சில சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாகவும் சில பகுதிகளில் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் தடுப்பூசி மையங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே நாடு இயற்கை அனர்த்தங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், மக்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள அழைக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் காலநிலை அடுத்த இரண்டு நாட்களில் இயல்புக்கு திரும்பும் என எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் தடுப்பூசி திட்டத்தை சுமுகமாக முன்னெடுக்க முடியும் எனவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் தடுப்பூசி வழங்கும் பணிகள் தற்போது மேல் மாகாணம், யாழ்ப்பாணம், மாத்தறை, குருனாகல், காலி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது.
இதனிடையே ஜூன் 8 முதல் மேலும் 12 மாவட்டங்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகளை ஆரம்பிக்க உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.