‘அஸ்ரா செனகா’ தடுப்பூசிகள் கிடைக்காவிட்டால் முதலாவது டோஸாக அந்த தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களுக்கு ‘ஸ்புட்னிக்’ அல்லது ‘ஜோன்சன் என்ட் ஜோன்சன்’ தடுப்பூசியை ஏற்றுவது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 9 இலட்சம் பேருக்கு கடந்த பெப்ரவரி மாதத்தில் ‘அஸ்ரா செனகா’ தடுப்பூசி முதலாவது டோஸ் ஏற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து மே மாதத்தில் அவர்களில் 3 இலட்சம் பேருக்கு இரண்டாவது டோஸ் ஏற்றப்பட்ட போதும், மிகுதி 6 இலட்சம் பேருக்கும் அதனை செலுத்துவதற்கு கையிருப்பில் அந்த வகை தடுப்பூசிகள் இல்லை.
இதனால் வெளிநாடுகளில் இருந்து 6 இலட்சம் ‘அஸ்ரா செனகா’ தடுப்பூசிகளை கொண்டு வருவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றது.
இந்நிலையில் ‘அஸ்ரா செனகா’ தடுப்பூசியை கொண்டு வர முடியாது போனால் ‘ஸ்புட்னிக்’ அல்லது ‘ஜோன்சன் என்ட் ஜோன்ஸன் தடுப்புகளை பயன்படுத்த முடியுமா என்று ஆராய்ந்து வருவதாக இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
குறித்த இரண்டு வகை தடுப்பூசிகள் ஒரு தடவை மாத்திரம் ஏற்றும் தடுப்பூசி என்பதால், முதலாது டோஸாக ‘அஸ்ரா செனகா’ தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்கள் இதில் ஒன்றை போட்டுக்கொள்வதால் பாதிப்புகள் இருக்காது என்றே கருதுகின்றோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.