July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு வருபவர்கள் அலுவலகங்களில் இருக்கின்றார்களா?: ஆராய விசேட பொலிஸ் குழுக்கள் நியமனம்

இலங்கை முழுவதும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய சேவைகளுடன் தொடர்புடைய நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு மாத்திரம் கொழும்பு நகருக்குள் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த அனுமதியை எவராவது தவறாக பயன்படுத்தி வேறு தேவைகளுக்காக கொழும்புக்கு வந்து செல்கின்றனரா? என்று கண்டறிவதற்காக விசேட பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகருக்குள் வாகனங்கள் நுழையும் போது, நுழைவிடங்களில் அமைக்கப்பட்டுள்ள சோதனை நிலையங்களில் பெற்றுக்கொள்ளப்படும் தகவல்களின் அடிப்படையில் அந்த வாகனங்களில் பயணித்தவர்கள் குறித்த நிறுவனத்தில் இருக்கின்றனரா? என்பது தொடர்பாக பொலிஸ் குழுக்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கே சென்று விசாரணைகளை நடத்துவர் என்று பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய சேவைகளுக்காக பணிகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை முதல் கொழும்பு நகருக்குள் வெளியிடங்களில் இருந்து அதிகளவான வாகனங்கள் வருகின்றன.

இதன்போது அத்தியாவசிய தேவையில்லாதவர்களும் கட்டுப்பாட்டை மீறி கொழும்புக்குள் வரலாம் என்பதனால் இதனை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.