November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின: மண்சரிவில் சிக்கி மூவரை காணவில்லை!

இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட சில மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடனான காலநிலையால் தாழ்நில பிரதேசங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

நேற்று அதிகாலை முதல் மேல், சபரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவுகின்றது.

இதனால் ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளின் நீர் மட்டம் உயர்வடைந்ததால் கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு, கொலன்னாவ, மஹரகம, வெள்ளம்பிட்டிய மற்றும் கடுவலை ஆகிய பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் களனி, வத்தளை, கிரிபத்கொட, பேலியாகொட உள்ளிட்ட பிரதேசங்களில் தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

களுத்துறை மாவட்டத்தில் இங்கிரிய, ஹொரண, புலத்சிங்கள மற்றும் அகலவத்த ஆகிய பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இரத்தினபுரி மாவட்டத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தமொன்றில் 3 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மீட்புக் குழுவினரின் உதவியுடன் காணாமல் போனோரை தேடி தேடுதல் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.