இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கஞ்சா கடத்தி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையின் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
மாதகல் கடற்பரப்பில் கஞ்சா கடத்தி வருபவர்கள் தொடர்பில் கடற்படை புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இன்று (02) காலை விசேட ரோந்து நடவடிக்கை மேற்கொண்ட கடற்படை நான்கு மூடைகளில் படகு மூலம் கடத்தி வரப்பட்ட 110 கிலோ கிராம் கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளது.
அத்துடன் கஞ்சா கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது இருவர் படகில் இருந்துள்ள நிலையில், ஒருவரை கடற்படை கைது செய்துள்ளது. மற்றைய சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாக கடற்படை செய்திகள் தெரிவிக்கின்றன.
கைதான மாதகல் பகுதியைச் சேர்ந்த 35 வயது சந்தேக நபரை கடற்படையினர் இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கொரோனா பரவல் அச்சம் மற்றும் போதைப்பெருள் கடத்தலில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காக கடற்படையினர் 24 மணிநேரமும் இலங்கை கடற்பரப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.