
பயணிகள் வருகைக்காக விமான நிலையம் திறக்கப்பட்டதை தொடர்ந்து இரண்டு விமானங்களில் வெளிநாட்டவர்கள் உட்பட 569 பேர் இன்று (01) இலங்கை வருகை தந்துள்ளனர்.
இவ்வாறு இலங்கைக்கு வருகை தந்தவர்களில் 19 பேர் சுற்றுலாப் பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த மாதம் 21 ஆம் திகதி நள்ளிரவு முதல் வெளிநாட்டிலிருந்து பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று (01) முதல் விமான நிலையங்கள் மீள திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதற்காக சில விசேட கட்டுப்பாடுகள் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ளதுடன், குறிப்பாக ஒரு விமானத்தில், 75 பேர் வரையில் மாத்திரமே பயணிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பயணிகள் வருகைக்காக விமான நிலையம் திறக்கப்பட்டதை தொடர்ந்து இரண்டு விமானங்களில் வெளிநாட்டவர்கள் உட்பட 569 பேர் இலங்கை வந்து சேர்ந்துள்ளனர். இதில் 19 பேர் சுற்றுலாப் பயணிகளும் அடங்கும்.
இதனிடையே, இன்று அதிகாலை முதல் ஆறு விமானங்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய கிழக்கு நாடுகளில் கொவிட் காரணமாக நிர்க்கதியாகியிருந்த இலங்கையர்களே பெரும் எண்ணிக்கையில் நாடு திரும்பியவர்களில் உள்ளடங்குவதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, விமான நிலையங்கள் திறக்கப்பட்டாலும், இந்தியா மற்றும் வியட்நாம் முதலான நாடுகளிலிருந்து வரும் பயணிகள், நாட்டுக்குள் நுழைவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
அந்த நாடுகளில் பரவும் கொரோனா வைரஸ் நிலைமையைக் கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.