எதிர்வரும் ஜூன் 07 ம் திகதிக்கு பின்னர் பயணக் கட்டுப்பாடுகளை நீட்டிப்பதற்கு இதுவரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என கொவிட்-19 தடுப்பு தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போதைய பயண கட்டுப்பாடுகள் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் பேசிய அவர்,
பயணத்தடை குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது. நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் மூன்றாம் அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு உன்னிப்பாக அவதானிக்கப்படுவதுடன் மீளாய்வு செய்யப்படும்.
அதன்படி, தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் ஜுன் மாதம் 14ஆம் திகதி வரை நீட்டிக்கவுள்ளதாக வெளிவரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பயணக் கட்டுப்பாடு நல்ல பலனை அளித்துள்ளதாகவும், சில சந்தர்ப்பங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை சிலர் மீறியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, அத்தியாவசிய சேவைகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிகளை மக்கள் தவறாக பயன்படுத்த முயற்சித்த சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், பயணத் தடையின் போது அனைத்து கடைகளும், பொது இடங்களும் மூடப்பட்டிருந்தமை காரணமாக இது குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தியது என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை, பயணக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து தொடர்ந்தும் அவதானிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள இராணுவத் தளபதி, இந்த வார இறுதியில் பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்து நீட்டிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் கொவிட்-19 தொடர்பிலான ஜனாதிபதி பணிக்குழுவுடன் கலந்துரையாடிய பிறகு அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.