May 16, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் 28 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக பயணக் கட்டுப்பாடுகள் அமுல்!

இலங்கை முழுவதும் நேற்று இரவு 11 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் 28 ஆம் திகதி வரையில் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

முன்னர் அறிவிக்கப்பட்டதற்கு அமைய மே 25 மற்றும் 28 ஆகிய திகதிகளில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படாது எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனினும் 25, 28 ஆம் திகதிகளில் அத்தியாவசிய தேவைகளுக்காக வீடுகளில் இருந்து ஒருவர் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அத்தியாவசிய சேவைகளுக்காக பயணிக்கும் நபர்களை பொலிஸார் உன்னிப்பாக அவதானிப்பார்கள் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்தோடு, பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கும் காலப்பகுதியில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோருக்கும், வைத்தியசாலைகளுக்கு அவசர நோயாளிகளை கொண்டு செல்வோரையும் தவிர வேறு எவருக்கும் வீடுகளை விட்டு வெளியேற முடியாது என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதேவேளை இந்தக் காலப்பகுதியில் பொதுப் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, நாட்டில் மதுபான சாலைகள் அனைத்தும் தொடர்ச்சியாக மே மாதம் 25 ஆம் திகதி வரை மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.