July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயணத்தடை விதிகளை மீறுபவர்களை கைது செய்ய 22,000 பொலிஸார் கடமையில்!

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறும் நபர்களை கைது செய்ய 22,000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இலங்கையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணி முதல் இரண்டு கட்டங்களாக பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பொலிஸ் அதிகாரிகள் வீதி தடைகளிலும், ரோந்து பணிகளிலும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் கொரோனா தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 423 பேர் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதுடன், 11743 பேர் வரை இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில், தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறி மாகாண எல்லைகளை கடக்க முயன்ற 215 பேர் நேற்று (வெள்ளிக்கிழமை) எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ஏப்ரல் 5 ஆம் திகதி அல்லது அதற்கு பின்னர் போக்குவரத்து குற்றங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டவர்கள் 14 நாட்கள் கடந்துள்ள போதும் மேலதிக தண்டப்பணம் இன்றி செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீள் அறிவிப்பு வரை நாட்டில் உள்ள எந்த ஒரு அஞ்சல் நிலையங்களிலும் செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.