November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”மக்களை பாதிக்காதவாறு பயணக் கட்டுப்பாட்டை செயற்படுத்துங்கள்”: ஜனாதிபதி ஆலோசனை

இலங்கையில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் போது மக்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பு இல்லாத வகையில் அதனை செயற்படுத்துவதற்கு நடவடிக்கையெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று இரவு 11 மணி முதல் நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ள நிலையில், அது தொடர்பாக கொவிட் தடுப்புச் செயலணிக்கும் ஜனாதிபதிக்கும் இடையே இன்று விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருந்தாலும் தொழிற்சாலைகளை தொடர்ந்தும் நடத்திச் செல்லவும், மருந்தகங்களை திறந்து வைத்திருக்கவும் நடவடிக்கையெடுக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் பேக்கரி உற்பத்திகளை தொடர்ந்தும் மேற்கொள்ளவும், அவற்றை மக்களுக்கு விநியோகிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கவும் அனுமதிக்குமாறும் அத்துடன், கப்பல் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனங்களை திறந்து வைத்திருக்க நடவடிக்கையெடுக்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலின் போது, அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கு பிரதேச செயலாளர் ஊடாக அனுமதிப் பத்திரத்தை விநியோகிக்கவும், வீதிச் சோதனை நடவடிக்கைகளுக்காக பொலிஸாருடன் இராணுவத்தையும் இணைந்துக்கொள்ளவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது அரச அதிகாரிகள் மற்றும் பொறுப்புவாய்ந்த தரப்பினர் ஊடக சந்திப்புக்களில் மக்களை அச்சுறுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிடுவதற்கு பதிலாக அது தொடர்பில் தனக்கு அறிவிப்பது பொருத்தமானதாக இருக்கும் என்றும், இதுவரையில் எடுத்த தீர்மானங்களும் இனி எடுக்கும் தீர்மானங்களும் விசேட குழுக்களின் ஆலோசனைகளுக்கமையவே இருக்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மக்களுக்காக எந்தவொரு சரியான தீர்மானத்தை எடுப்பதற்கும் தான் பின்வாங்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இந்த கலந்துரையாடலில் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.