July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை முழுவதும் 14 நாட்களுக்கு தொடர்ச்சியாக பயணக் கட்டுப்பாட்டை விதிக்குமாறு கோரிக்கை!

இலங்கை முழுவதும் 14 நாட்களுக்கு தொடர்ச்சியாக பயணக் கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும் என்று இலங்கை மருத்துவர் சங்கம் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அந்த சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சுகாதார கட்டமைப்பு பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அரச வைத்தியசாலைகளில் தொற்றாளர்கள் நிரம்பியுள்ளதுடன், அவசர சிகிச்சைப் பிரிவுகளிலும் கடுமையான இடப்பற்றாக்குறை நிலவுவதாகவும் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை சமூகத்தில் மேலும் பல தொற்றாளர்கள் இருக்கலாம் எனவும், இதனால் தற்போது நடைமுறையில் உள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை, தேசிய அடையாள அட்டை முறைமை, மூன்று நாட்கள் குறுகிய பயணக்கட்டுப்பாடு போன்றவற்றால் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று நம்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய நிலைமையில் 14 நாட்களுக்கு கடும் பயணக் கட்டுப்பாடுகளை அல்லது ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்குமாறு கேட்பதாகவும், அதன் பின்னர் நிலைமையை மீளாய்வு செய்து கட்டம், கட்டமாக கட்டுப்பாடுகளை தளர்த்தலாம் என்றும் இலங்கை மருத்துவர் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.