
வட மாகாணத்திற்கு இந்தியா பல்வேறு அபிவிருத்தி உதவிகளை செய்ய முயன்ற வேளையில் அதனை தடுத்தவர்கள் இன்று சீனாவுக்கான ஒரு முன்னுரிமையை மட்டும் வழங்குவதில் ஏன் கரிசனை கொண்டுள்ளீர்கள்.கொழும்பு துறைமுக நகருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழர்களுக்கான உரிமையை வழங்குவதிலும் கொடுத்திருந்தால் இன்று இலங்கையின் வடக்கு,கிழக்கும் உங்களுக்கு கடன் வழங்கியிருக்குமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. எஸ்.ஸ்ரீதரன் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு துறைமுக நகர் விவகாரத்தை பின்கதவு இராஜதந்திரமாகவே நாம் பார்க்கின்றோம்.சீனாவின் இந்த கடன் காலனித்துவம் என்பது இலங்கையின் மேட்டு நிலமான சில பகுதிகளை பள்ளமாக்கி ஆழ் கடலில் ஒரு மண்மேட்டை உருவாக்கி 269 ஹெக்டேயரில் இந்த செயற்கை தீவு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தீவில் உருவாக்கப்பட்டுள்ள வர்த்தக மையத்தில் இலங்கையில் இருக்கின்ற நாணயத்தைத்தான் பயன்படுத்துவார்களா அல்லது சீனாவின் நாணயமா அல்லது அமெரிக்க டொலரா அங்கு பயன்படுத்தப்படும் என்பது தொடர்பில் இதுவரை யாரும் இங்கு சரியான விளக்கம் அளிக்கவில்லை. உருவாக்கப்படும் சீனாவின் தனிநாட்டுக்குள் என்ன நாணயம் பயன்படுத்தப்படப்போகின்றது?அதே நேரம் அங்கே இருக்கப்போகின்ற பொலிஸ் இலங்கை பொலிஸா அல்லது சீன பொலிஸா ஆட்சி நடத்தப்போகின்றது என்பதையும் இங்கு தெளிவுபடுத்த வேண்டும்.
பலாலி விமான தளத்தை இந்தியா உருவாக்கி அந்த விமான தளத்திற்கான வேலைகளை ஆரம்பிக்கின்ற போது இந்த அரசு அதனை தடுத்திருந்தது.தலைமன்னாருக்கும் தூத்துக்குடிக்குமான கப்பல் சேவையை இந்த அரசு தடுத்தது. இந்த விடயங்களை தடுத்து சீனாவுக்கான ஒரு முன்னுரிமையை மட்டும் வழங்குவதில் மட்டும் ஏன் கரிசனை கொண்டுள்ளீர்கள்?
இன்று புலம்பெயர் நாடுகளிலே 13 இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இருக்கின்றார்கள். எத்தனையோ தொழிலதிபர்கள் இருக்கின்றார்கள்.இவர்கள் இந்த மண்ணிலே முதலீடு செய்வதற்கு தயாராக இருக்கின்றார்கள். குறிப்பாக அவர்கள் வடக்கிலும் கிழக்கிலும் இருக்கின்ற தொழிற்சாலைகளை கூட இயக்குவதற்கான திராணியோடும் தைரியத்தோடும் உள்ளனர்.ஆனால் அவர்கள் இந்த மண்ணிலே வந்து தங்களுடைய முதலீடுகளை செய்ய முடியாமல் அரசினால் தடுக்கப்படுகின்றார்கள்.அதற்கான சுதந்திரம் இல்லை. அவ்வாறு ஒருவர் முதலீடு செய்ய முனைகின்றபோது அரசின் மத்திய வங்கி என்பதும் அரசின் சட்ட திட்டங்களும் பொருளாதார ஆணைக்குழுவும் அந்த செயற்பாடுகளை முற்று முழுதாக தடுக்கின்றன எனவும் ஸ்ரீதரன் சுட்டிக் காட்டினார்.