November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழர்கள் கேட்பது அனைத்தும் மறுக்கப்படுகின்றது,சீனா கேட்கும் சகலதும் வழங்கப்படுகின்றது’; சி.வி.விக்னேஸ்வரன்

இந்த அரசிடம் தமிழர்கள் கேட்பது அனைத்தும் மறுக்கப்படுகின்றது. சீனா கேட்கும் சகலதும் வழங்கப்படுகின்றது.இந்த நாடு எமக்கும் உரியது.அதனை தாரை வார்க்க அனுமதிக்க முடியாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ்.மாவட்ட எம்.பி.யுமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்;

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்ட மூலத்தை அவசர
அவசரமாக நிறைவேற்ற முயன்ற அரசுக்கு உயர் நீதிமன்றம் கடிவாளத்தை கெட்டியாக போட்டுள்ளது. இலங்கைக்குள் ஒரு சீன அரசை உருவாக்கவா இந்த அவசரம்.பொருளாதார ரீதியில் சீனாவின் காலடியில் இலங்கை விழுந்துள்ளது.கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்ட மூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட அன்றே சீனா இன்னொரு கடனை அறிவித்துள்ளது.வீணாக தமிழர்களுடன் பகைத்து உலகெல்லாம் இலங்கை கடனாளியாகியுள்ளது.

ஒரே நாட்டில் கூட்டு சமஸ்டி முறை அரசியல் அமைப்பையே தமிழர்கள் கோருகின்றனர். ஆனால் இந்த அரசிடம் தமிழர்கள் கேட்பது அனைத்தும் மறுக்கப்படுகின்றது. சீனா கேட்கும் சகலதும் வழங்கப்படுகின்றது.சீனாவின் கொடையாளியாக அவர்கள் கேட்கும் அனைத்தையும் இலங்கை வழங்குகின்றது. ஒரே நாடு ஒரே சட்டத்துக்கு என்ன நடந்தது? இந்த நாடு எமக்கும் உரியது. இதனை தாரைவார்க்க அனுமதிக்க முடியாது.நீதித்துறையின் ஏகபோக உரிமையையும் தாரைவார்க்க முடியாது.எனவே கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்ட மூலம் தொடர்பில் புதிய வரைபை வரையுங்கள்.அதனை ஆராய எமக்கும் கால அவகாசம் தாருங்கள். அவசர அவசரமாக இந்த சட்ட மூலத்தை நிறைவேற்றாதீர்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.