July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கு மீண்டும் ‘சினோபார்ம்’ தடுப்பூசிகளை அன்பளிப்பாக வழங்கும் சீனா!

இலங்கைக்கு மேலும் 5 இலட்சம் ‘சினோபார்ம்’ தடுப்பூசிகளை அன்பளிப்பாக வழங்குவதற்கு  சீன தூதரகம் முன்வந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த மார்ச் மாத இறுதியில் 6 இலட்சம் ‘சினோபார்ம்’ தடுப்பூசிகளை சீன அரசாங்கம் அன்பளிப்பாக வழங்கியிருந்தது.

இதில் ஒரு தொகை தடுப்பூசி இலங்கையிலுள்ள சீன பிரஜைகளுக்கு செலுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து உலக சுகாதார ஸ்தாபனம் சீனாவின் ‘சினோபார்ம்’ தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியதையடுத்து இலங்கை மக்களுக்கு 8 ஆம் திகதி முதல் இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையில் தற்போது வரை ‘சினோபார்ம்’ தடுப்பூசியின் முதல் டோஸ் 457,840 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தொற்று நோய் பிரிவு தெரிவிக்கின்றது.

இதனிடையே 9 இலட்சம் ‘ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனிகா’ தடுப்பூசிகள், ஜூன் மாதமளவில், இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அஸ்ட்ரா செனெகா, கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றுக்கொண்டவர்களுக்கு தேவையான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது குறித்து இலங்கை அரசு வெளிநாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வரும் நிலையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.