July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ள காலத்தில் பொருளாதார மத்திய நிலையங்கள் செயற்படும் விதம் தொடர்பில் அறிவிப்பு

எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையில் இரண்டு கட்டங்களாக நாட்டில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதன் காரணமாக நாட்டின் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் குறித்த காலப்பகுதியில் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய  21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையும் மூடப்படும் பொருளாதார மத்திய நிலையங்கள் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், மீண்டும் 26 முதல் 28 ஆம் திகதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேலியகொட மெனிங் சந்தை உள்ளிட்ட அனைத்து பொருளாதார மையங்களும் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இவ்வாறு செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 25 ஆம் திகதி பொருளாதார மையங்களுக்கு காய்கறிகளையும் பழங்களையும் கொண்டு செல்ல அனைத்து லொரிகளுக்கும் அனுமதி வழங்க அரச முகவர்கள் மற்றும் பிரதேச செயலகங்களால் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இதற்கான அனுமதியை 21 ஆம் திகதி, பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முன்னர் மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் விவசாயிகள் உரிய அதிகாரிகளிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ள சில்லறை மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு 25 ஆம் திகதி காலை 8 மணிக்குள் காய்கறிகள் மற்றும் பழங்களை விநியோகிக்கும் வகையில் பொருளாதார மையங்களினால் திட்டமிடப்பட்டுள்ளது.