November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அடையாள அட்டையின் இறுதி இலக்க நடைமுறையை மீறிய 141 பேர் கைது!

அடையாள அட்டையின் இறுதி இலக்க நடைமுறையை மீறியமை தொடர்பில் 141 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தேசிய அடையாள அட்டை முறைமையை  பின்பற்றுவது குறித்து, 11 ஆயிரத்து 408 பேரிடம் நேற்று ((திங்கட்கிழமை) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 223 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக கவசங்களை அணியாமை மற்றும் சமூக இடைவெளியினை பின்பற்றாமை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில், தனிமைப்படுத்தல் விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்ட கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், 10 ஆயிரத்து 73 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, இது தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும், சுகாதார தரப்பினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றி செயற்படுமாறும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) 18 ஆம் திகதி என்ற காரணத்தினால், தேசிய அடையாள அட்டையின் இறுதியில், இரட்டை இலக்கத்தைக் கொண்டவர்கள் மாத்திரம் வெளியே செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

எனினும், கடமைகளுக்கு செல்லும் நபர்களுக்கு இந்த முறைமை கட்டாயம் கிடையாது என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி  பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன மேலும் குறிப்பிட்டார்.