நாட்டில் கடந்த மூன்று நாட்கள் நாடளாவிய ரீதியில் அமுலிலிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ள போதிலும் அடுத்த மூன்று வாரங்கள் மிகவும் அவதானமிக்கவை என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
எனவே நாட்டு மக்கள் இந்த காலப்பகுதியில் தேவைப்பட்டால் மட்டுமே தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
நாட்டில் புதிய கொரோனா வைரஸ் தொற்று வீரியமாக பரவிவரும் நிலையில் சுகாதார பிரிவினர் மிகவும் நெருக்கடிகளுக்கு மத்தியில் பணியாற்றி வருகின்றனர்.
எனவே பொது மக்கள் பயணக் கட்டுப்பாடுகள் இல்லாத சந்தர்ப்பங்களை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று முதல், மே 31 வரை தினமும் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் பயணத் தடை விதிக்கப்படும் அதேவேளை, எல்லா சந்தர்ப்பங்களிலும் மக்கள் அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தப்படுவதாக அவர் மேலும் கூறினார்.
வணிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறைக்கு அமைய குறைந்தபட்ச ஊழியர்களை வேலைக்கு அமர்த்துமாறும் கூறினார்.
நாட்டில் கொரோனா தொற்றுப்பரவலை கட்டுப்படுத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் எனவும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கேட்டுக்கொண்டார்.