இலங்கை முழுவதும் கடந்த மூன்று நாட்களாக விதிக்கப்பட்டிருந்த முழுநேர பயணக் கட்டுப்பாடு இன்று அதிகாலை 4 மணியுடன் நீக்கப்பட்டது.
எவ்வாறாயினும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடரும் என்பதுடன், இன்று இரவு முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் இரவு நேர பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.
இதேவேளை இன்று காலை முதல் 10 மாவட்டங்களில் 70 கிராம சேவகர் பிரிவுகளை தனிமைப்படுத்த நடவடிக்கையெடுத்துள்ளதாக கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானி இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் 6 கிராம சேவகர் பிரிவுகளும், திருகோணமலை மாவட்டத்தில் 12 கிராம சேவகர் பிரிவுகளும், குருநாகல் மாவட்டத்தில் 24 கிராம சேவகர் பிரிவுகளும், இரத்தினபுரி மாவட்டத்தில் 9 கிராம சேவகர் பிரிவுகளும், காலி மாவட்டத்தில் இரண்டு கிராம சேவகர் பிரிவுகளும், அம்பாறை மாவட்டத்தில் ஒரு கிராம சேவகர் பிரிவும், களுத்துறை மாவட்டத்தில் 4 கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் மாத்தளை மாவட்டத்தில் 2 கிராம சேவகர் பிரிவுகளும், நுவரெலியா மாவட்டத்தில் 9 கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.