இலங்கையில் கடந்த 13 ஆம் திகதி இரவு முதல் அமுல்படுத்தப்பட்ட முழு நேர பயணக் கட்டுப்பாடு நாளை அதிகாலை முதல் தளர்த்தப்பட்ட பின்னர், அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த வேறு தேவைகளுக்காக வெளியில் செல்வோர் கட்டாயம் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்க அடிப்படையிலேயே செல்ல முடியும்.
இதன்படி நாளை அதிகாலை 4 மணிக்கு பின்னர் பயணத்தடை அமுலில் இல்லாத காலப்பகுதியில் நாளாந்த தொழிலுக்கு செல்வோரை தவிர மற்றையவர்களுக்கு, வெளியில் செல்ல அடையாள அட்டையின் இறுதி இலக்க நடைமுறை அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதன்படி அடையாள அட்டையின் இறுதி இலக்கம் 1, 3, 5, 7, 9 ஆக இருக்குமாக இருந்தால் ஒற்றை இலக்க திகதிகளிலும், 2, 4, 6, 8, 0 ஆகிய இலக்கங்களை கொண்டிருந்தால் இரட்டை இலக்க திகதிகளிலும் வெளியில் செல்ல முடியும்.
இதனால் வெளியில் செல்லும் நேரங்களில் அடையாள அட்டையை கையில் வைத்திருக்க வேண்டியது அவசிமாகும்.
அவ்வாறாக தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் கடவுச்சீட்டையோ அல்லது சாரதி அனுமதிப்பத்திரத்தையோ பயன்படுத்த முடியும். அவையும் இல்லையென்றால் தமது கிராம சேவகரிடம் தமது அடையாள அட்டை தொடர்பான ஆவணமொன்றை பெற்றுக்கொள்வது அவசிமாகும்.
இந்த நடைமுறை மே 31 ஆம் திகதி வரையில் அமுலில் இருக்கும் என்று பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.