November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் இறுக்கமடைந்த பயணக் கட்டுப்பாடு: 20,000 பொலிஸார் பாதுகாப்புக் கடமையில்!

இலங்கையில் மூன்று நாட்களுக்கு முழு நேர பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு முதல் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 20 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொவிட் தொற்று நிலைமை தீவிரமடைந்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்தும் வகையில், நீண்ட வார இறுதி விடுமுறையான இன்று முதல் திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரையில் முழு நேர பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் பணியாளர்களை தவிர வேறு யாருக்கும் வீடுகளை விட்டு வெளியேற முடியாது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவசரமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட வேண்டிய நோயாளர்கள் இருப்பார்களாக இருந்தால் அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்படும் என்றும், ஆனால் அவ்வாறாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வாகனங்களின் சாரதிகள் வைத்தியசாலைக்கு சென்று திரும்பிய பின்னர் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்க வேண்டும் என்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்று முதல் திங்கட்கிழமை அதிகாலை வரையில் பஸ், ரயில்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வாகனங்களும் மற்றும் வாடகை வாகனங்களும் இயங்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மருந்தகங்களை தவிர வேறந்த வர்த்தக நிறுவனங்களையும் இந்த மூன்று நாட்களும் திறக்க முடியாது. இதன்படி யாரேனும் சட்டத்தை மீறி வெளியில் நடமாடினாலோ அல்லது வர்த்தக நிலையங்களை திறந்தாலோ அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன்படி நேற்று இரவு முதல் திங்கட்கிழமை அதிகாலை வரையில் அனைத்து பிரதேசங்களிலும் பொலிஸாரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.