
இலங்கையில் பல மாவட்டங்களில் நிலவும் சீறற்ற காலநிலையால் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
காலி, அளுத்வத்த பகுதியில் நேற்று மாலை வெள்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அத்துடன் கேகாலை பகுதியில் இன்று அதிகாலை வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததால் அதில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நேற்று காலை முதல் நாட்டின் மேல், சபரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றது.
இதனால் தென் மாகாணத்தில் பல பிரதேசங்களில் வெள்ள அபாய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால் அந்தப் பகுதில் மீட்புக் குழுவினரை தயார் நிலையில் வைத்திருப்பதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
தொடரும் மழையுடன் கூடிய காலநிலையால் களுத்துறை, கேகாலை, கொழும்பு, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நேற்றிரவு கினிகத்தேனை பகுதியில் பெய்த பலத்த மழைக் காரணமாக பொல்பிட்டிய மாதெனியாவத்த பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்குள்ள வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில ஐவர் காயமடைந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மண்ணுக்குள் புதையுண்டவர்களை பிரதேச மக்களும், லக்ஸபான இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
இதன்போது பலத்த காயமடைந்த மகளும், தாயும் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தொடர்ந்தும் மழை பெய்தால் மலைப்பாங்கான பகுதிகளில் மண் சரிவு ஏற்படக்கூடும் என நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.