November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் பயணக் கட்டுப்பாடு விதிமுறைகளை மீறினால் ஆறு ஆண்டு சிறைத்தண்டனை’

தனிமைப்படுத்தல் அல்லது பயணக் கட்டுப்பாடு விதிமுறைகளை மீறுகின்ற நபர்களுக்கு ஆறு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 10 ஆயிரம் ரூபா வரை அபராதம் அல்லது அந்த இரண்டு தண்டனைகளும் சேர்த்து ஒன்றாக விதிக்கப்படலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அத்துடன், நாடு முழுவதும் இன்று இரவு முதல் நடைமுறைக்கு வரவுள்ள பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், தனிமைப்படுத்தல் அல்லது பயணக் கட்டுப்பாடு விதிமுறைகளை மீறுபவர்கள் குறித்து உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுபோன்ற பல புகார்கள் நாட்டில் உள்ள பல பொலிஸ் நிலையங்களுக்கு தற்போது கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் நேற்றைய தினம் 448 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 8,747 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக  தெரிவித்த அவர், மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடு விதிமுறைகளை மீறிய 145 வாகனங்களை சேர்ந்த 229 நபர்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார்.

இதனிடையே, மேல் மாகாணத்தில் உள்ள 380 மதுபான விற்பனை நிலையங்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் பிறகு 1597 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அவர்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை கடுமையாக மீறிய 25 பேர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.