இலங்கையில் இன்று இரவு 11 முதல் திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரையில் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படாது என்று பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இன்று இரவு 11 மணி முதல் நாடு முழுவதும் மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக பயணத்தடை விதிக்கப்படவுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் மக்களின் நடமாட்டம் முற்றாக தவிர்க்கப்பட வேண்டும் என்பதனால் திங்கட்கிழழை அதிகாலை 4 மணி வரையில் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்காதிருக்க தீர்மானித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும்.
குறிப்பாக மருந்துகளை கொள்வனவு செய்யவும், வைத்தியசாலைக்கு செல்லுவோருக்கும் அனுமதி வழங்கப்படும். மேலும், மருந்தகங்களுக்கு மருந்துகளை விநியோகிக்க அனுமதி வழங்கப்படும். அதனை தவிர வேறு நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த மூன்று நாட்களும் அடையாள அட்டையின் இறுதி இலக்க நடைமுறையும் செயற்படுத்தப்படாது என்றும் பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.