இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் மூன்று நாட்களுக்கு முழுநேர பயணத்தடை விதிக்கப்படவுள்ள நிலையில், நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரையில் நாடு முழுவதும் பயணத் தடை விதிக்கப்படவுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் மருத்துவ தேவைகள் தவிர்ந்த வேறு எந்த காரணத்திற்காகவும் மக்கள் வெளியில் நடமாட முடியாது.
இதன்படி இன்று இரவு முதல் சகல பிரதேசங்களிலும் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதற்காக அனைத்து பொலிஸாரின் விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை பொலிஸாருடன் இராணுவத்தினரும் இணைந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபடவுள்ளனர்.
இந்தக் காலப்பகுதியில் சட்டத்தை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன் இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் பயணக்கட்டுப்பாடு அமுலில் இல்லாத காலப்பகுதியில் மக்கள் வெளியில் நடமாடுவது தொடர்பாக சுகாதார அமைச்சினால் விசேட ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி ஏதேனும் தேவைக்காக மக்கள் வெளியில் செல்வதென்றால் தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டின் இறுதி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே வெளியே செல்ல முடியும்.
அவர்களின் அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டின் இறுதி இலக்கமாக 1,3,5,7,9 ஆகியன இருந்தால், ஒற்றை எண்களைக் கொண்ட திகதிகளில் அவர்களுக்கு வெளியே செல்லலாம்.
அத்துடன் இறுதி இலக்கமாக 0,2,4,6,8 ஆகியன இருந்தால், இரட்டை எண்களைக் கொண்ட திகதிகளில் அவர்களால் வெளியில் செல்ல முடியும்.
இதனால் வீடுகளை விட்டு வெளியில் வருவோர் தேசிய அடையாள அட்டையையோ, கடவுசீட்டையோ அல்லது சாரதி அனுமதிப்பத்திரத்தையோ எடுத்து வருவது கட்டாயமாகும் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்று இரவு 11 மணிக்கு பின்னர் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரையில் நாடு பூராகவும் வர்த்தக நிலையங்களை திறக்க முடியாது என்பதுடன், மக்களுக்கு வெளியில் செல்லவும் முடியாது என்றும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.