January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

குறைந்த வருமானம் பெறுவோருக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்குமான வீட்டுத் திட்டங்களை துரிதப்படுத்த நடவடிக்கை!

குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வீட்டு வசதிகளை பெற்றுக்கொடுக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ, தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தேசிய வீடமைப்பு அதிகாரசபை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அலரி மாளிகையில் நேற்று மாலை நடைபெற்ற இந்த கலந்துரையாடலின் போது, குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கென முன்மொழியப்பட்ட வீட்டுத்திட்டங்கள் மற்றும் தற்போது செயற்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை தாமதமின்றி நிறைவு செய்ய நடவடிக்கையெடுக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் கொழும்பு பம்பலபிட்டிய மற்றும் நாராஹேன்பிட்டி ஆகிய பிரதேசங்களில் நிர்மாணிக்கப்படவுள்ள வீட்டுத்திட்டங்களுக்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும், சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனங்களை தெளிவூட்ட நடவடிக்கையெடுக்குமாறும் அவர் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த, பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன, இராஜாங்க அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் கீர்த்தி ரஞ்சித் அபேசிறிவர்தன, வீடமைப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் டீ.ஏ.பியசேன வீரரத்ன, பிரதி பொது முகாமையாளர் கே.ஏ.ஜானக, சட்ட அதிகாரி டீ.எம்.ஜயலத் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.