இலங்கையில் கொரோனா வைரஸின் 5 புதிய வகைகள் பரவி வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான பீடத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது.
கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, மன்னார், மட்டக்களப்பு, குருநாகல், மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் உலக நாடுகள் பலவற்றில் பரவி வரும் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரணு விஞ்ஞான பீடத்தின் பணிப்பாளர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
இந்தியாவில் பரவி வரும் பி 1.617 வைரஸ் பாதிப்புக்குள்ளான ஒருவர் இலங்கையில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்டார்.
சமீபத்தில் இலங்கை வந்த இவருக்கு விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். சோதனையின் போது கொரோனா தொற்று அடையாளம் கண்டதையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த வைரஸ் ஏனைய வைரஸ்களை விடவும் 15% தீவிரமானது என சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது.
அத்தோடு பிரித்தானிய மாகாணமான கென்டில் பரவி வரும் பி.1.1.7 என்ற வைரஸ் கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு மாநகர சபை பகுதி, ஹோமாகம, பொரலஸ்கமுவ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடையாளங் காணப்பட்டுள்ளது.
அத்துடன் குருநாகல் மாவட்டத்தில் பொல்பித்திகம, குளியாபிட்டி, நிகவரெட்டிய, கனேவத்தை, அம்பலன்பொல, கிரிவுல்ல, பன்னல, வாரியபொல, மற்றும் பண்டுவஸ்நுவர ஆகிய பகுதிகளிலும் பிரித்தானியாவில் பரவி வரும் குறித்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்திலும், பொலன்னறுவை மாவட்டத்தின் ஹிங்குரங்கொட மற்றும் மெதிரிகிரிய, பிரதேசங்களிலும் மன்னார் நகர பகுதியிலும் இந்த வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரணு விஞ்ஞான பீடம் தெரிவிக்கின்றது.
இதேவேளை, டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுடன் மத்திய கிழக்கு நாடுகளிலும் பரவி வரும் பீ.1.428 என்ற வைரஸ் திரிபுடன் யாழ்ப்பாணத்திலும் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நல்லூரில் பிரதானமாக குறித்த வைரஸ் பரவி வருகின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் ஏற்கனவே பரவல் அடைந்த கொரோனா வைரஸின் பி.1.411 என்ற புதிய வகை மட்டக்களப்பு மற்றும் கொழும்பின் சில பிரதேசங்களில் பரவி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
அத்துடன் நைஜீரியாவில் பரவும் பீ.1.525 என்ற வைரஸ் கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகமை பிரதேசத்திலும் அடையாளங் காணப்பட்டுள்ளது.
இதனிடையே கொழும்பில் அமைந்துள்ள தனியார் தனிமைப்படுத்தல் மையம் ஒன்றில் பீ.1.351 என்ற தென்னாபிரிக்க வைரஸ் திரிபு கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான பீடம் மேலும் தெரிவித்துள்ளது.