July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலக சுகாதார ஸ்தாபன தலைவருடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கலந்துரையாடல்

இலங்கைக்கு அவசரமாக தேவைப்படும் 6 இலட்சம் ‘ஒக்ஸ்போர்ட் அஸ்ரா செனகா’ தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் ஆதானோம் கெப்ரிரேயஸ் உடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கலந்துரையாடியுள்ளார்.

‘சூம்’ தொழில்நுட்பம் ஊடாக இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த 12 இலட்சம் அஸ்ரா செனகா தடுப்பூசிகளில் 9 இலட்சம் தடுப்பூசிகள் முதல் டோசாக செலுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றில் எஞ்சிய 3 இலட்சம் தடுப்பூசிகள் இரண்டாவது டோசாக செலுத்தப்பட்டுள்ளது.

எனினும் இன்னும் 6 இலட்சம் பேருக்கு இரண்டாவது டோஸ் செலுத்த வேண்டியுள்ள நிலையில் கையிருப்பில் குறித்த தடுப்பூசிகள் இல்லை. இதனால் அதே தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

இந்நிலையில் இன்று நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பிரகாரம் இலங்கைக்கு தேவைப்படும் 6 இலட்சம் அஸ்ரா செனகா தடுப்பூசிகளை பெற்றுக் கொடுக்க உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் முயற்சிப்பார் என எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

குறித்த கலந்துரையாடலின் போது, சீனாவின் ‘சினோபார்ம்’ தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த இன்னும் 2, 3 நாட்களுக்குள் ஒப்புதல் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, தற்போது கையிருப்பில் உள்ள 6 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளை இலங்கை மக்களுக்கு செலுத்த முடியும் என ஜனாதிபதி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.