November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கை மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்படலாம்’: எச்சரிக்கிறார் கொவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சர்

இலங்கையின் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவுவதாக ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்று நோய்கள் மற்றும் கொவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே எச்சரித்துள்ளார்.

நாட்டின் கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்க முடியுமான நோயாளர் தொகை உச்சத்தை எட்டியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒரே தடவையில் அதிகமான நோயாளர்களை மருத்துவமனைகளில் வைத்து, சிகிச்சையளிக்கும் வசதிகள் குறைந்துகொண்டு செல்வதாகவும், அவசர சிகிச்சைப் பிரிவுகள் குறைவாக இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் தெரியவரும் வரை சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளான 16 ஆயிரத்து 734 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.