May 27, 2025 17:41:55

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பயண கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்’; இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை

இலங்கையில் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் வைத்தியசாலைகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகள் தற்போதே நிரம்பியுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தீவிரம் அடைந்துவரும் புதிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அன்றாடம் முன்னரை விடவும் 3 மடங்கான நோயாளிகள் பதிவாகி வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன சுட்டிக்காட்டினார்.

இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அத்தியாவசிய தேவைகளை மட்டும் இயங்க அனுமதித்து, கடுமையான பயண கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை மருத்துவ சங்கம் முன்வைப்பதாக அவர் குறிப்பிட்டார்.

முன்னைய வைரஸ் பரவலின் போது ஒரு குடும்பத்தில் தொற்று கண்டறியப்பட்டால், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தொற்று உறுதியாவது குறைவு. எனினும் தற்போது பெரும்பாலும் ஒரு குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக வீடுகளில் வைத்து சிகிச்சை வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இது போன்ற சந்தர்ப்பங்களில் வீட்டில் உள்ள அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியம் எனவும் தெரிவித்தார்.

அத்தோடு தொற்றுக்குள்ளானவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகளை வழங்குவதுடன், அவர்கள் சரீரம் வறட்சி அடையாத வகையில் உணவுகளை வழங்க வேண்டும் எனவும் வைத்தியர் பத்மா குணரத்ன அறிவுறுத்தினார்.