July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை

இலங்கையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 1891 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஐந்தாவது நாளாக பதிவான அதிகூடிய எண்ணிக்கை இது என்பதுடன், நாட்டில் ஒரே நாளில் பதிவான அதிகூடிய கொவிட் தொற்றாளர் எண்ணிக்கையும் இதுவாகும்.

புதுவருட கொண்டாட்டங்களை அடுத்து நாட்டில் தொடர்ச்சியாக கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது.
அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 111,753 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 97,242 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

அத்தோடு நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 13,814 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 687 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கெஸ்பேவ சுகாதார பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த வார பகுதியில் 700 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கெஸ்பேவ சுகாதார பிரிவுக்குள் உள்ள 26 கிராம சேவகர் பிரிவுகளிலும் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்று (சனிக்கிழமை) நாட்டில்  1716 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

ஏப்ரல் 27 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகி வரும் நிலையில், ஒப்பீட்டளவில் நேற்று பதிவான கொரோனா தொற்று எண்ணிக்கை 54.4 சதவீத  அதிகரிப்பை காட்டுவதாக சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.

நேற்று (சனிக்கிழமை) இனங்காணப்பட்ட  1,716 கொரோனா தொற்றாளர்களில் 375 பேர் கொழும்பின் பல பகுதிகளிலும் பதிவாகினர்.

அத்தோடு கம்பஹா மாவட்டத்தில் 274 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 158 பேரும், காலி மாவட்டத்தில் 138 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 108 பேரும் அதிக எண்ணிக்கையில் பதிவாகினர்.

கொழும்பு, திருகோணமலை, நுவரெலியா,  களுத்துறை  ஆகிய நான்கு மாவட்டங்களில், பொலிஸ் பிரிவு ஒன்றும், ஏழு கிராம சேவகர் பிரிவுகளும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணியுடன் தனிமைப்படுத்தப்பட்டன.

அத்தோடு, மஹரகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட அரவ்வல வடக்கு கிராம சேவகர் பிரிவு நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.