கொரோனா நெருக்கடியை வெற்றி கொள்ள சர்வதேச நாடுகள் இலங்கைக்கு உதவேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
கொரோனாவை பயன்படுத்தி அரசியல் இலாபம் ஈட்டவோ, அதனை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தவோ தாம் தயார் இல்லை எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.
இரு தினங்களுக்கு முன்பு சர்வதேச நாடுகளின் தூதுவர்களுடன் சஜித் பிரேமதாச சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.
இதன் போது, கொரோனா தொற்றிலிருந்து நாடு மீண்டுவர சர்வதேச நாடுகளின் முழுமையான ஒத்துழைப்பை தாம் எதிர்பார்ப்பதாக தாம் வலியுறுத்தியதாகவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் வெளிநாட்டு தூதரகங்களுடன் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு கலந்துரையாடியதாக தெரிவித்த அவர், தேவையான எண்ணிக்கையில் தடுப்பூசிகளையும் கொரோனா பரிசோதனை கருவிகளையும் வழங்குமாறு கோரியதாகவும் குறிப்பிட்டார்.
அத்தோடு நாட்டின் தற்போதைய தேவையான நடமாடும் வைத்தியசாலைகளை வழங்குமாறு தாம் குறிப்பாக அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய இராச்சியத்திடம் கேட்டுக்கொண்டதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.