January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் அறிகுறியற்ற கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஆயுர்வேத மருத்துவமனைகளுக்கு அனுமதி!

(Photo : www.ayurvedadept.nc.gov.lk)

அறிகுறியற்ற கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்க ஆயுர்வேத மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள் ஏற்கனவே பண்டிகை காலத்தை தொடர்ந்து அடையாளம் காணப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்களினால் நிரம்பியுள்ளன.

இதன் காரணமாக, கொரோனா நோயாளிகளை அனுமதிக்க சாதகமான இடங்களை ஆராய்ந்து வருவதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பொரளை ஆயுர்வேத போதனா மருத்துவமனை, நாவின்ன ஆயுர்வேத மருத்துவமனை மற்றும் யக்கல ஆயுர்வேத மருத்துவமனை ஆகிய மூன்று மருத்துவமனைகளில் கொரோனா நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே பல்லேவெல ஆயுர்வேத மருத்துவமனையில் கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் அறிகுறிகள் உள்ள கொரோனா நோயாளிகளை கொரோனாவுக்கான விசேட மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.