
இலங்கையில் அமைதி வழி போராட்டங்களை நிகழ்த்துவதற்கான உரிமையைப் பறிப்பதானது கருத்துச் சுதந்திரத்தை மீறும் செயற்பாடாகும் என ஊடக அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
குறித்த ஒன்றியம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில், பிரமுகர் வாகன தொடரணிக்கு அமைதியான முறையில் எதிர்ப்புத் தெரிவித்த இளைஞன் கைது செய்யப்பட்டமைக்கு ஊடக அமைப்புகளின் ஒன்றியம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இதுபோன்ற கைது நடவடிக்கைகள் காரணமாக பொதுமக்களின் அமைதிவழி போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை மற்றும் சுதந்திரம் மீறப்படுவதாகவும் ஊடக அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
பொதுமக்கள் பயன்படுத்தும் பிரதான வீதியின் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, பிரமுகர் வாகன தொடரணிக்கு சிறப்பு வாய்ப்பு வழங்கியதற்கு எதிராகவே இளைஞனின் தலைமையில் எதிர்ப்பு வெளியிடப்பட்டதாகவும் குறித்த ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் எந்தவொரு நடவடிக்கைக்கும் எதிர்ப்பு தெரிவிக்க ஒவ்வொரு பிரஜைக்குமான உரிமை அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பால் உறுதியளிக்கப்பட்ட கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மற்றும் பேச்சுரிமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பல்வேறு கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாகவும் ஊடக அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.
ஊடக தொழிலாளர் தொழிற்சங்க சம்மேளனம், சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் ஆகியன ஒன்றிணைந்து, இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.